வி.பி. சிங் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பிரிவில் ஜனவரி 8, 1990ல் ஹிந்து புரோகிதர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நவம்பர் 9, 1989ல் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டுமென அவர் தனது மனுவில் கோரினார். இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை எவ்வித கட்டுமானப் பணியையும் அங்கே அனுமதிக்க முடியாது என்று வி.பி. சிங் அரசு திட்டவட்டமாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பாபரி மஸ்ஜித் இடம் தொடர் பாக உ.பி. சுன்னத் ஜமாஅத் மத்திய வக்பு வாரியம் டிசம்பர் 18, 1961ல் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம், அலஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு ஜனவரி 12, 1990&ல் உத்தரவிட்டது. இந்த மனுவை விசாரித்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் ‘முழு பெஞ்ச், நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்குகளின் விசார ணை முடிவடைவதற்கு முன்பு இது குறித்து கருத்து சொல்ல இயலாது’ என்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத் செய்த மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள் ளுபடி செய்தது.
இதற்கிடையில் அனைத்திந்திய பாபரி மஸ்ஜித் நடவடிக்கை குழு இப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் இப்பிரச் சனைக்கு உயர்நீதிமன்றம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்றும் இதற்கான வழக்கை விசாரிக்க தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்மாகவோ அல்லது ஹிந்துவாகவோ அல்லாத நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
பாபரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின் இந்த தீர்மானத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட வேண்டிய சொத்து தொடர்பான வழக்கு இல்லை என்றும் இது வரலாற்று தவறை திருத்துவது தொடர்பான நிகழ்வு என்றும் எனவே எந்தவொரு நீதிமன்றமும் இது குறித்து தீர்ப்பு அளிக்க இயலாது என்றும் அந்த அமைப்பு அறிவித்தது. அலஹாபாத்தில் ஜனவரி 27, 28&ல் நடைபெறும் தர்மாச்சாரியர்கள் சம்மேளனத்தில் (ஹிந்து மடாதிபதிகள் மாநாட்டில்) எடுக்கப்படும் முடிவின் வழிகாட்டலின் அடிப்படையில் தாங்கள் செயல்படப் போவதாகவும் வி.ஹெச்.பி. அறிவித்தது.
மடாதிபதிகள் மாநாட்டில் அயோத்தியில் ராமர்கோயில் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவதற்கு நல்ல நாள் பிப்ரவரி 14, 1990 என்று அறிவிக்கப்பட்டது. பஞ்சாபிலும் காஷ்மீரிலும் அப்போது நிலவிய மோசமான நிலையைக் காரணம் காட்டி கட்டுமானப் பணி தொடக்க நாளை தள்ளிவைக்க பிரதமர் வி.பி. சிங் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஜுன் 8க்குள் இப்பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று வி.ஹெச்.பி. கெடு வைத்தது. இந்த கெடுவிற்குள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் அக்டோபர் 30ஐ கட்டுமானப் பணியைத் தொடங்கும் தினமாக மீண்டும் வி.ஹெச்.பி. அறிவித்தது.
இந்தப் பின்னணியில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல் ஆணையத்தின் அறிக்கையை வி.பி. சிங் தூசித் தட்டி எடுத்தார். இந்த அறிக்கை இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு) அளிக்கப்பட்டதாகும். ஆகஸ்ட் 7, 1990ல் மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வி.பி. சிங் அரசு தாக்கல் செய்தது. இந்திய சமூக நீதி வரலாற்றில் மாபெரும் மைல்கல்லாக வி.பி. சிங் அரசின் இந்த நட வடிக்கை அமைந்தது. ஆனால் உயர்சாதியினரும் அவர்களது கட்சியான பா.ஜ.க.வும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின. மண்டல் ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக போராட்டங்களை அரங்கேற்றின. பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்களின் ஆதரவு இனி தங்களுக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக ஒரு பெரும் சதித்திட்டம் வகுக்கப்பட்டது. இதன் காரணமாகத் தான் பா.ஜ.க. தலைவர் அத்வானி குஜராத்தில் உள்ள சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு செப்டம்பர் 25 அன்று ஒரு ரதயாத்திரை புறப்பட்டார். அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜித் இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இந்த 10 ஆயிரம் கி.மீ. பயணத்தை அத்வானி தொடங்கினார். வழி யெங்கும் ரத்த யாத்திரையாக அது அமைந்தது. இதன் விளை வாக அத்வானி பீஹார் மாநிலத்தில் நுழைந்த போது சமஸ்திபுர் என்ற ஊரில் அவர் அக்டோபர் 23 அன்று கைது செய்யப்பட்டார். அப்போது பீஹார் முதலமைச் சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார்.
பா.ஜ.க. ஆதரவுடன் மத்தியில் இருந்த வி.பி. விங் அரசு இதன் விளைவாக நவம்பர் 9 அன்று கவிழ்ந்தது.
-இ.அருட்செல்வன்
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)