Breaking News

பாபரி பள்ளிவாசல் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-3

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ராஜீவ் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி 36 ஆண்டு காலமாக பூட்டப்பட்டி ருந்த பாபரி மஸ்ஜிதை ஹிந்து பக்தர்களுக்கு திறந்து விடும் அநீதமான படலத்தில் வெற்றி பெற்ற விசுவ ஹிந்து பரிஷத், பின்னர் மஸ்ஜித் நிலை கொண் டிருக்கும் இடத்தில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பத் திட்டமிட்டது. 1987ல் சங்பரிவார் சார்பில் நாடு முழுவதும் இத்திட்டம் குறித்து சிந்தனையாளர் கூட்டம் நடத்தப் பட்டது.

 

1989ஆம் ஆண்டு ஜனவரியில் அலஹாபாத்தில் நடைபெற்ற ‘விராத் சாந்த்’ சம்மேளனத்தில், அயோத்தியில் ராமருக்கு ஆலயம் எழுப்ப நான்கு கட்ட நடவடிக்கைக்கு திட்டம் தீட்டப் பட்டது. ஜூன் 1989ல் பாலன்பூரில் பா.ஜ.க.வின் தேசிய கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஆதரவாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்தை செப்டம்பர் 30, 1989ல் துவக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1989ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இத்திட்டத்தை முன்வைத்து எதிர் கொள்வது என்றும் தீர்மானிக் கப்பட்டது. இத்திட்டத் தின்படி,

 

  • முதல் கட்ட நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள எல்லா ஊர்களிலும், கிராமங்களிலும் ராமச் செங்கல்லுக்கு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • இரண்டாவது கட்ட நடவடிக்கை யாக பூஜிக்கப்பட்ட செங்கற்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களு க்கு கொண்டு வந்து “மஹாயாகம்‘ புரிவது.
  • மூன்றாவதாக பூஜிக்கப்பட்ட செங்கற்களை அயோத்திக்கு அனுப்பி வைப்பது.
  • நான்காவதாக நவம்பர் 9, 1989 அன்று அயோத்தியில் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் ராமருக்கு 25 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவது.

இந்த நான்கு கட்ட நடவடிக்கை துவங்குவதற்கு முன்பாகவே ராஜீவ் காந்தி அரசு விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களை சந்தித்து அவர்களுக்குத் தமது ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் வழங்கியது. இதனை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில:

கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘சன்டே’ வார இதழில் (5-&11 நவம்பர் 89, பக்கம் 35) சுமித் மித்ரா எழுதுகிறார்:

பூட்டாசிங் (ராஜீவ் அமைச் சரவையில் உள்துறை அமைச்சர்) ஜூலை மாதம் முதல் விசுவ ஹிந்து பரிஷத் குழுவுடன் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளின் போது அயோத்தி சொத்தை (பாபரி மஸ்ஜிதை) அவர்களுக்குக் கொடுக்க கொள்கை அளவில் ஒத்துக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.

இதே காலக் கட்டத்தில் பிரதமரின் ஆலோசகர் தவானுடன் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் வி.எச். டால்மியா தொடர்பு கொண்டார். இன்னொரு விசுவ ஹிந்து பரிஷத் தலைவரான முன்னாள் உ.பி. மாநில காவல்துறை தலைமை இயக்குனர் எஸ்.சி.தீக்ஷித், மத்தியப் புலனாய்வுத் துறையிலுள்ள (ஐ.பி.) தனது முன்னாள் சகாக்களுடன் தொடர்பு கொண்டார்.

புலனாய்வுத் துறையின் அப் போதைய இயக்குனர் எம்.கே.நாராயண் (சமீப காலம் வரை மன்மோகன் அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந் தவர்), பழைய டெல்-லியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்று அதன் தலைவர் பாலா சாஹிப் தேவரஸின் சகோதரர் பாவ்ராவ் தேவரஸை சந்தித்தார். நாக்பூருக்கு (ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு) அனுப்பிய அறிக்கையில் நாராயண் தன்னிடம் பின்வருமாறு கூறியதாக பாவ்ராவ் தெரிவித்துள்ளார்:

ஆர்.எஸ்.எஸ். ஏன் இ.காங்கிரஸை ஆதரிக்க மறுக்கின்றது. ஆதரித்தால் எவ்விதத் தடையு மின்றி அதற்கு கோயில் கிடைத்து விடுமே’’. இத்தகவலை வெளியிட்ட ‘சன்டே’ வார இதழ் அன்றைய காலக்கட்டத்தில் இ.காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு சார்பான இதழாக இருந்தது. ‘ஹிந்து’ பத்திரிகை குடும்பச் சஞ்சிகை யான ‘பிரண்ட்லைன்’ இதழில் அதன் லக்னோ நிருபர் பி.கே.ராய்  பின்வருமாறு அன்றைய நிகழ்வுக ளைப் பதிவு செய்துள்ளார்:

“முன்னதாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் பயன் தராததால், விசுவ ஹிந்து பரிஷத்துடன் பேசுவதற்கு பூட்டாசிங் மீண்டும் செப்டம்பரில் லக்னோ வந்தார். திவாரி (அப்போதைய உ.பி. முதல்வர்) மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. – செப்டம்பர் கூட்டத்தில் பூஜிக்கப்பட்ட செங்கற்கள் கொண்டு வரப்படுவதற்கும், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பு வழங்க அரசு வாக்குறுதி வழங்கியது.’’ (பிரண்ட் லைன் நவ -& 25 – டிச.8, 1989 பக்கம் 30).

இன்னும் பல தரமான பத்திரி கைகள் (ஸ்டேட்ஸ்மென் 21.-10.-89, இந்தியா டுடே (தமிழ்) டிச.20, 89, நியூ ஏஜ் அக் 15, 1989 முத-லியன) ராம்சீலா ஊர்வலங்களும், நவம்பர் 9 அன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவும் எவ்வாறு ராஜீவ் காந்தியின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தன என்பதை பட்டவர்த்தன மாக நிரூபித்துள்ளன. எவ்விலை கொடுத்தாவது, ராமர் கோயி லுக்கு அடிக்கல் நாட்ட வேண்டு மென்பதில் ராஜீவ் அரசு முனைப் புடன் பாடுபட்டது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவு அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச், பாபரி மஸ்ஜித் சம்பந்தப் பட்ட வழக்கை விசாரித்து ஆகஸ்ட் 14, 1989 அன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் சர்ச்சைக்குரிய இடத்தில் எவ்வ கையான மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது, “உள்ளது உள்ள படியே’ (ஷிtணீtuஷீ னிuஷீ) இருக்க வேண்டுமென்று உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. ஆனால் ராஜீவ் காந்தி அரசு இத்தீர்ப்பை மீறி விசுவ ஹிந்து பரிஷத்துடன் செப்டம்பர் 27ல் உடன்பாடு கண்டது. நாடு முழுவதும் ராம் சீலா (செங்கல்) ஊர்வலங்கள் நடத்த விசுவ ஹிந்து பரிஷத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் “உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென’’ உத்தரவிட்டாலும் அதனை மீறி நவம்பர் 9 அன்று (நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக) அடிக்கல் நாட்டவும் அரசு பூரண ஒத்துழைப்பு அளித்தது.

நவம்பர் 6ம் தேதி உ.பி. அரசு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில், விசுவ ஹிந்து பரிஷத் அடிக்கல் நாட்ட தேர்ந்தெடுத்துள்ள இடம் சர்ச்சைக்குரியதா என்று விளக்கம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இம் மனுவில்:

“ஆகஸ்ட் 14 அன்று பிறப்பிக்கப்பட்ட கோர்ட் உத்தரவை மீறி விசுவ ஹிந்து பரிஷத் பிளாட் எண் 586ல் அடிக்கல் நாட்ட இடத்தை தேர்ந்தெடுத்துள்ளது. அது இவ்விடத்தைச் சுற்றி வே-லி அமைத்து காவிக்கொடி பறக்கவிட்டுள்ளது. அடிக்கல் நாட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவ்விடம் சர்ச்சைக்குரியதா என்று நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.’’என்று உ.பி. அரசு சார்பில் கூறப்பட்டது. மறுநாள் நவம்பர் 7 அன்று இம் மனுவை விசாரித்த நீதிபதிகள், அடிக்கல் நாட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சர்ச்சைக்குரியதுதான் என்றும், கட்டடம் நிற்கும் இடம் மட்டுமல் லாமல் பிளாட் எண் 586 உட்பட 23 பிளாட்கள் சர்ச்சைக் குரியவை என்றும் கூறினர். இந்த அனைத்து இடங்களிலும் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டு மெனவும் நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே நிர்வாண சாமியார் தேவ்ராஹா பாவாவை ராஜீவ் காந்தியும், பூட்டா சிங்கும் மதுராவில் நவம்பர் 6ல் சந்தித்தனர். ராஜீவின் தலையில் பாவா தனது கால்களை வைத்து ஆசீர்வதித்து விட்டு, விசுவ ஹிந்து பரிஷத் தீர்மானித்துள்ள இடத்தில் அடிக்கல் நாட்ட ராஜீவ் தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். இதனை விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் சிங்கால் ஊர்ஜிதம் செய்தார். நவம்பர் 3ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்ட ராஜீவ் காந்தி ஒத்துக் கொள்வார் என்று தேவ்ராஹா பாவா தன்னிடம் கூறியதாக அவர் அப்போது கூறினார். (பார்க்க: இந்தியன் எக்ஸ்பிரஸ் (புதுடெல்-லி) 14-.11.-89 டெ-லிகிராப் 12-.11.-89, பிரண்ட்லைன் 25-11 – 8.-12-.89).

இருப்பினும் அன்றைய ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அளித்த ஊக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் ராம்சீலா ஊர்வலங்கள் இரத்த ஆறுகளை உருவாக்கின. இதன் முத்தாய்ப் பாக விளங்கியது “பாகல்பூர் படுகொலைகள்’. நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை மோசமடைய காரணமாக இருந்த ராம செங்கல் ஊர்வலங்களைத் தடை செய்யவோ, நவம்பர் 9 அன்று நடத்த திட்டமிடப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவை இரும்புக் கரத் துடன் தடுக்கவோ ராஜீவ் காந்தி விரும்பவில்லை.

ராஜீவ் காந்தி அரசு நீதிமன்றத் தின் ஆணையை அவமதித்து தேவ்ராஹா பாவாவின் விருப்பத் திற்கு சரணடைந்தது. நவம்பர் 8 அன்று பூட்டாசிங், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு லக்னோ விரைந்தார். எவ்வாறாயி னும், விசுவ ஹிந்து பரிஷத் அடையாளமிட்டுள்ள இடத்தில் அடிக்கல் நாட்ட தேவையானதை செய்யும்படி அவர் மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

நவம்பர் 7ஆம் தேதி, உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் அடிக்கல் நாட்ட விசுவ ஹிந்து பரிஷத் பிளாட் எண் 586ல் இடத்தை தேர்ந்தெடுத்து, வேலி-யிட்டு காவிக் கொடி ஏற்றியது, ஆகஸ்ட் 14, 1989 அன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறியச் செயல் என்று வாதித்த உ.பி. அரசு மறுநாள் – நவம்பர் 8 அன்று பிளாட் எண் 586 சர்ச்சைக்குரிய இடமல்ல என்று அறிவித்தது. உயர்நீதிமன்றம் தடை செய்த இடத்தில், துவேஷமிக்க முழக்கங்கள் எதிரொ-லிக்க, பாபரி மஸ்ஜிதிற்கு சொந்தமான இடத்தில் நவம்பர் 9 அன்று கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் தலையங்கம் நவம்பர் 9 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை இப்படி வர்ணித்தது:

“நவம்பர் 9 சந்தேகத்திற்கு இடமில் லாமல் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாக விளங்குகின்றது. உண்மையில் பூட்டை உடைக்க எடுக்கப்பட்ட தேவையில்லாத முடிவு முதல், இவ்வளவு மாதங் களாக பூட்டாசிங்கும் மற்றவர் களும் ஒரு தீர்வு காண முடி யாமல் போனது வரை உள்ள சம்பவங்களைத் திரும்பிப்பார்க் கும் போது, அவை ஹிந்து ஓட்டைப் பெற எடுக்கப்பட்ட திட்டமிட்ட முடிவுகள் என்பது தெளிவாகின்றது.’’ (ஸ்டேட்ஸ்மென்11.-11-.89, டெல்லி)

ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் நிருபர் பத்ரிரைனா நவம்பர் 9 நிகழ்ச்சியை இப்படி வர்ணிக்கிறார்:

“ யோத்தியில் இந்திய அரசு மண்டியிட்டது. காங்கிரஸ் கொடியும், தேசீய மூவண்ணக் கொடியும், காவிக் கொடியிடம் தன்மானமின்றி சரணடைந்தன.’’ (13.11.89 ஸ்டேட்ஸ்மென்)

“ஹிந்துக்கள், அரசைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வளைய வைத்துள்ளார்கள்’’ என்று ஒத்துக் கொண்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் (11.-11.-89)

சர்ச்சைக்குரிய இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டாலும், ராஜீவ் அரசும், வானொலி- மற்றும் தொலைக்காட்சியும், முஸ்லி-ம் லீக் உட்பட அதன் தோழமைக் கட்சி களும் அடிக்கல் நாட்டப்பட்ட இடம் சர்ச்சைக்குரியது அல்ல என்று பிரச்சாரம் செய்து வந்தன.

அடிக்கல் நாட்டு விழா சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெ றவில்லையென ராஜீவும் அவரது அடிவருடிகளும் போட்ட பொய் வேஷத்தை பல பத்திரிகைகளும், முஸ்லி-ம் தலைவர்களும் உடனடி யாகக் கலைத்தனர்.

அகில இந்திய பாபரி மஸ்ஜித் குழுவின்  ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ஜஃப்பர்யாப் ஜீலானி அவர்கள் நவம்பர் 9 சம்பவம் குறித்து பேசும் போது: “இது நீதித் துறையை ஏளனம் செய்வது போலுள்ளது. எந்த அரசு நவம்பர் 7ல் அவ்விடம் சர்ச்சைக் குரியது என்று கூறியதோ, அதே அரசு மறுநாள் அது சர்ச் சைக்குரிய இடமல்ல என்று கூறியுள்ளது. நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்‘’என்று கூறினார்.

அயோத்தியில் நவம்பர் 9 அன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்த “இந்தியா வீக்‘ வார இதழின் நிருபர் பிரசாந்த் குமார் கூறுகின்றார்: “ஒரு விஷயம் மட்டும் பளிங்கு போல் தெளிவாகத் தெரிகின்றது: அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி விவாதத் திற்குரிய பிளாட் எண் 586ல் நடைபெற்றுள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் அந்த இடம் சர்ச்சைக்குரியது, எனவே அங்கே அடிக்கல் விழா நடக்க அனுமதிக்க முடியாது என்று கூறிய போதும், அது அங்கு நடைபெற்றுள்ளது. அடிக்கல் நாட்டிய இடத்தின் பகுதி சர்ச்சைக்குரியது அல்ல என்ற மாவட்ட நிர்வாகத்தின் சமாதானம் வெற்றுவாதமாகும்‘’

விசுவ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் அசோக் சிங்காலும் சர்ச்சைக்குரிய இடத் தில் தான் தாங்கள் அடிக்கல் நாட்டியுள்ளதாக “சண்டே அப்சர்வர்’’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“வானொலி, தொலைக்காட்சி மூலம் நாங்கள் அடிக்கல் நாட்ட முன்பு தேர்ந்தெடுத்த இடத்தை மாற்றிவிட்டதாகவும், அடிக்கல் நாட்டிய இடம் சர்ச்சைக்குரிய இடத்திற்கு வெளியில் இருப்ப தாகவும் அரசு கூறிவருகின் றது. ஆனால் உயர்நீதி மன்றத் தீர்ப்பு குறித்து எங்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்ட (நவம்பர் 3 அன்று பிளாட் எண் 586ல் அடையாளமிட்ட) இடத்தில் நாட்டுவோம் என்று அரசுக்கு தெளிவுபடுத்தினோம்.’’

இந்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு விரும்பிய அளவில் பலன் தரவில்லை. ஆனால் சங்பரிவார் அமைப்புகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் மூலம் தங்கள் திட்டத்தை வலிமையுடன் செயல்படுத்துவதற்கு வழி பிறந்தது.

1989 நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அதுவரை காணாத அளவிற்கு மிக மோசமான முஸ்லிம் விரோத கலவரத்தின் களமாக அமைந்து விட்டது. வட மாநிலங்களில் 800க்கும் மேற்பட் டோர் இக்கலவரத்தில் உயிர் இழந்தனர்.

பா.ஜ.க.வின் சார்பாக போட்டியிட்டவர்களில் 88 பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக் கப்பட்டனர். இவர்களின் ஆதர வுடன் வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது.

வி.பி. சிங் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் தான் பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு களை விசாரிப்பதற்கு அலஹாபத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அங்கு எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக்கூடாது என்று வி.பி. சிங் அரசு சார்பில் இந்த நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த சிறப்பு பிரிவு உ.பி. மாநில அரசிடம் இந்த நிலத்தின் தன்மை என்ன-? என்று விளக்கம் கேட்டது. சிலான்யாஸ் என்னும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டுமென ஒரு ஹிந்து புரோகிதர் இந்த சிறப்பு பிரிவில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரியது. பாபரி மஸ்ஜித் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படும் வரை எவ்வித கட்டுமானப் பணியையும் அனுமதிக்க முடியாது என்று வி.பி. சிங் அரசு திட்டவட்டமாக நீதிமன்றத்திடம் தெரிவித்தது.

-இ.அருட்செல்வன்
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Check Also

பாபரி மஸ்ஜிதும், நீதிமன்றங்களும்! ஒரு வரலாற்றுப் பார்வை-4

வி.பி. சிங் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பிரிவில் ஜனவரி 8, 1990ல் ஹிந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *