Breaking News

பாபரி பள்ளிவாசலும் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-2

1949&ல் பூட்டப்பட்ட பள்ளிவாசல் 1986&ல் திறக்கப்பட்டது சட்டவிரோதம்!

24 ஆண்டுகளுக்குப் பிறகு அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

-இ.அருட்செல்வன்

1986 பிப்ரவரி 1ம் தேதி வரை பாபரி மஸ்ஜித் பூட்டப்பட்டு, உள்ளே மிம்பரில் (சொற்பொழிவு மேடையில்) வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பூசாரிகளால் காலையிலும் மாலையிலும் பூஜிக்கப்பட்டு வந்தன. ஹிந்து பக்தர்கள் பூஜை நடப்பதை வெளி யில் இருந்து பார்வையிட்டு வந்தார்கள். முஸ்லிம்கள் பள்ளி வாசல் அருகில் வருவதற்கு கூட தடை நீடித்து வந்தது. அலஹா பாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் வழக்கு தொடர் ந்து நடைபெற்று வந்தது.

ஆனால் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனையை நடுவீதிக்குக் கொண்டு வந்தது ‘விசுவ ஹிந்து பரிஷத்’ எனும் சனாதன பயங்கரவாத இயக்கம். 1984 செப்டம்பர் 25ஆம் நாள் நேபாளத்தில் உள்ள ஜனக்பூரி லிருந்து (சீதாதேவி பிறந்ததாகக் கூறப்படும் இடம்) அயோத்தி வரை ‘ராம ஜென்மபூமி மீட்பு’ ரத யாத்திரையை அது நடத்தியது. யாத்திரையின் இறுதியில் அனை வரும் அக்டோபர் 7, 1984ல் அயோத்தியில் கூடினர். பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து, உள்ளே சென்று அதனை முழு கோயிலாக மாற்ற சனாதன பயங்கரவாதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ‘ராம ஜென்ம பூமி நடவடிக்கை குழு’வும் இதே நாளில் அமைக்கப்பட்டது. ‘தாலே கோலோ’ (பூட்டைத் திற) போராட்டமும் அன்றைய தினம் துவக்கப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31&ல் கொல்லப்பட்ட தை அடுத்து, தனது போராட்டத்தை விசுவ ஹிந்து பரிஷத் தற்காலிகமாக ஒத்தி வைத்தது. அக்டோபர் 23, 1985ல் 25 இடங்களில் மீண்டும் ‘பூட்டைத் திற’ போராட்டம் துவக்கப்பட்டது. மார்ச் 9, 1986&க்குள் மாவட்ட நிர்வாகம் பாபரி மஸ்ஜித் கதவு களைத் திறந்து விடாவிட்டால் தடையை மீறி, பூட்டை உடைத்து, மஸ்ஜிதிற்குள் செல்லவும் விசுவ ஹிந்து பரிஷத் முடிவு செய்தது.

இதற்கிடையே டிசம்பர் 18, 1985 அன்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களான எஸ்.என்.கத்திவு, பி.என்.அகர்வால் (இருவரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிப திகள்), எஸ்.சி.தீக்ஷித் (இவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி. ஆவார்) ஆகியோர் பைஸாபாத் மாவட்ட ஆட்சியர் இந்து குமார் பாண்டேயை சந்தித்தார்கள். தாங்கள் மறுநாள் ஜென்மபூமியில் ராமரை தரிசிக்க விரும்புவதாகவும், ‘கோயிலை’ (அதாவது பாபரி மஸ்ஜிதை) பூட்டிவைத்திருப்பது சட்ட விரோத மானது என்றும், எனவே பூட்டை அகற்ற வேண்டுமென்றும் அவர் கள் தெரிவித்தனர். உ.பி. முதல்வர் வீர் பகதூர் சிங்கையும் இந்த பயங்கரவாதிகள் சந்தித்து அவரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர். இந்த மனுவின் பிரதி மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டேவிடமும் அளிக்கப்பட்டது. (வி.எச்.பி. தலை வர்களின் இந்த சந்திப்புகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் 30-.3-.86 அன்று எஸ்.கே.திரிபாதி எழுதியிருந்தார்.)

முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் நிகழ்ந்த சந்திப் பிற்குப் பிறகு, உமேஷ் சந்தர் பாண்டே என்ற அயோத்தியைச் சேர்ந்த 28 வயது வழக்கறிஞர் வடிவில் விசுவ ஹிந்து பரிஷத் ஜனவரி 25, 1986&ல் ஒரு வழக்கை முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனுவில் ஸ்ரீராமரை பூஜிக்க உள்ள தடைகள் அகற் றப்பட வேண்டுமென கோரப்பட்டது. உரிமையியல் சம்பந்தப்பட்ட இச்சிவில் வழக்கில் உமேஷ் சந்தர் பாண்டே ஒரு வாதி அல்லவென்பதை இங்கே கவனிக்க வேண்டும். மனுவை விசாரித்த சடர் முனிசீப் ஹரி சங்கர் துபே ஜனவரி 28, 1986 அன்று இம்மனுவை நிராகரித்து தீர்ப்பு வழங்கினார். பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இவரும் ஒருவர். 1950ல் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இப்போது இருப்பதால் எந்த உத்தரவையும் தன்னால் பிறப்பிக்க முடியாது என்று முனிசீப் ஹரி சங்கர் துபே தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அநீதியின் வடிவம் கே.எம்.பாண்டே

 

முனிசீப் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட நீதிபதி யின் முன் ஜனவரி 31, 1986 அன்று மேல் முறையீட்டு  மனு தாக்கல் செய்யப்பட்டது. மறு நாள் பிப்ரவரி 1, 1986 அன்றே மனுவை விசாரித்தார் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே. பாபரி பள்ளிவாசலின் முத்தவல்லி முஹம்மது ஹாசீம் அன்சாரி தன்னையும் இவ்வழக்கில் பிரதிவா தியாக சேர்த்து விசாரிக்க வேண்டு மென கூறினார். ஆனால் மாவட்ட நீதிபதி இவ்வேண்டுகோளை நிராகரித்தார். மாவட்ட ஆட்சியர் இந்து குமார் பாண்டே, (ஏற்கனவே இவரை வி.எச்.பி. தலைவர்கள் டிசம்பர் 18ல் சந்தித்தை முன்னர் பார்த்தோம்) மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கர்மவீர் சிங் ஆகியோரிடம் சட்டம், ஒழுங்கு நிலை குறித்த அறிக்கையைக் கேட்டு அதனை பதிவு செய்து கொண்டார் மாவட்ட நீதிபதி. ஒரே நாளில் மட்டுமே விசாரித்து விட்டு, 13,178 நாட்கள் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடனடியாக திறந்து விடுமாறு பிப்ரவரி 1, 1986 மாலை 4.40க்கு ‘நீதிபதி’ கே.எம்.பாண்டே உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில்:

‘சட்டம் ஒழுங்கை பராமரிக்கவோ அல்லது சிலைகளை பாதுகாக் கவோ நுழைவாயில் பூட்டியிருப் பது அவசியமில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. மனு தாரருக்கும், சமுதாயத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தேவையில்லாத தொல்லையாக இப்பூட்டு அமைந்துள்ளது. சிலைகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே செயற்கையான தடை அவசியமில்லை என்று தோன்று கிறது. கடந்த 35 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாததின் விளைவாக எதிர்க்கட்சியினர் (உமேஷ் பாண்டே தரப்பினர்) கைதிகளாக இருந்துள்ளனர் என்று தோன்றுகிறது. ஒரு கட்டத்தில், நுழைவாயில் பூட்டைப் போடுவது உசிதமானது என்று யாரோ ஒருவருக்கு அறிவில் பட்டுள்ளது. அதற்குப் பிறகு பூட்டு தேவையா அல்லவா என்பதை ஒருவரும் எண்ணிப் பார்க்கவில்லை.’

கே.எம்.பாண்டே தனது தீர்ப்பில் மேலும் கூறினார்:

‘வாதிகளின் வாதங்களை கேட்ட பின்னர், நுழைவாயில் பூட்டு திறந்து, யாத்திரீகர்களையும், பக்தர்களையும் உள்ளே இருக்கும் சிலைகளை பார்க்கவும், பூஜிக்கவும் அனுமதிப்பதால் முஸ்லிம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவார்கள் என்று கற்பனையாகக்கூட கருத முடியாது. தற்போது அச்சொத்து நீதிமன்ற பொறுப்பிலுள்ளது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட விஷயம். 1950, 51-ல் அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் கடந்த 35 ஆண்டுகளாக ஹிந்துக்கள் சிலைகளை சில நிபந்தனை களுடன் பூஜித்து வரும் போது, நுழைவாயில் உள்ள பூட்டை அகற்றுவது மூலம் வானம் இடிந்து விழாது. விவாதத்திற்குரிய இடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என மாவட்ட ஆட்சியர் இன்று என் முன் சாட்சியம் சொல்லியுள்ளார். விவாதத்திற்குரிய இடத்திற்கு அருகில் கூட செல்வதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. நிலைமை இவ்வாறு இருக்குமாயின், கதவுகளை திறப் பதால் எவ்வித சட்ட, ஒழுங்கு பிரச்சனையும் எழாது. இது முழுக்க முழுக்க வளாகத்திற்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சியாகும். மாவட்ட ஆட்சியரும், மூத்த காவல்துறை கண்காணிப்பாளரும் சாதகமான அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகு, பூட்டுகள் தொடர்ந்து தொங்குவது நீதியாகாது.’

இவ்வாறு தீர்ப்பு வழங்கிய 40 நிமிடங்களுக்குள், பாபரி பள்ளிவாசலின் பூட்டுகள் உடைக் கப்பட்டு, அது முழுமையான கோயிலாக மாற்றப்பட்டது.

பாண்டே வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது:

4 ஆண்டு களுக்கு பிறகு அலஹாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு!

கே.எம்.பாண்டேயின் இந்த உத்தரவை எதிர்த்து ஹாசிம் அன்சாரி அலஹாபாத் உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீடு மனு குறித்தும் செப்டம்பர் 30ல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது மட்டுமில்லை, அதுவே டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக் கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அயோத்தி வழக்கில் செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கியுள்ள அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிபகத்துல்லாஹ் கான், கே.எம். பாண்டேயை கடுமை யாக சாடியுள்ளார். பூட்டை திறந்து விடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப் பதில் அசாதாரணமான வேகம் காட்டப்பட்டதாகவும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில் லையென்றும் நீதிபதி கான் குறிப்பிட்டுள்ளார். இதில் முஸ்லிம் தரப்பின் வாதத்தை அறிய போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லையென்றும் நீதி வழங்கப்பட்டுள்ளது என்ற புறத்தோற்றம் ஏற்படும் வகையிலும் கூட இந்த வழக்கு விசாரிக் கப்படவில்லை என்று நீதிபதி கான் குறிப்பிட்டுள்ளார்.

உமேஷ் சந்தர் பாண்டே இந்த வழக்கில் ஒரு வாதியே இல்லை என்றும் அவரது மனு ஏற்கத்தக்கதல்ல என்றும் நீதிபதி கான் கூறியுள்ளார். ஹாசிம் அன்சாரி தனது தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை கே.எம். பாண்டே நிராகரித்ததும் தவறு என்று நீதிபதிகான் குறிப்பிட்டுள்ளார்.

உமேஷ் சந்தர் பாண்டே முதலில் முனிஷிப் நீதிமன்றத்தில் பூட்டை திறக்க’ கோரி மனு அளித்த போது அது நிராகரிக்கப்பட்டது. அந்த தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் வாதி அல்லாத உமேஷ் சந்தர் பாண்டே தொடுத்திருக்கும் போது அதனை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நீதிபதிக்கு இல்லை. லக்னோ பிரிவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் இதில் மாவட்ட நீதிபதி தீர்ப்பு அளித்திருப்பது சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்றும் நீதிபதி கான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான விசாரணை நடை பெற்றது என்ற தோற்றத்தைக் கூட அளிப்பதற்கு நீதிபதி பாண்டே முன்வராததற்கு காரணம் அவ்வாறு விசாரணை நடத்தினால் பூட்டை திறக்கும் உத்தரவை பிறப்பித்திருக்க இயலாது என்று அவர் கருதியிருப்பார் என்று நீதிபதி கான் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை வழங்கியதின் மூலம் நீதியின் நெறிமுறை ஒன்றை மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே ஆழமாக புதைத்துள்ளார் என்றும் நீதிபதி கான் தனது தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு கே.எம். பாண்டே வழங்கிய தீர்ப்பு இன்று சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும் கே.எம். பாண்டே வழங்கிய சட்ட விரோதமான தீர்ப்பு நாட்டையே ரணகளமாக்கியது.

35 ஆண்டுகளாக தீர்ப்பளிக்கப் படாததால் ஹிந்துக்கள் கைதிகளாக உள்ளனர் என்று தனது தீர்ப்பில் கே.எம்.பாண்டே குறிப்பிட்டார். ஆனால் இதே கால அளவிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும் என்று பொறுமையுடன் இருந்த முஸ்லிம்கள் பற்றி தனது தீர்ப்பில் ‘…நுழைவாயில் பூட்டைத் திறந்து, யாத்திரீகர்களையும், பக்தர் களையும் உள்ளே இருக்கும் சிலை களைப் பார்க்கவும், பூஜிக்கவும் அனுமதிப்பதால் முஸ்லிம்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவார்கள் என்று கற்பனையாகக்கூட கருத முடியாது’ என்று குறிப்பிடும் போது விசுவ ஹிந்து பரிஷத்தின் கைக்கூலியாக காட்சியளிக்கிறார் மாவட்ட நீதிபதி(?) கே.எம்.பாண்டே. (இவரது பாணியைத் தான் தற்போது செப்டம்பர் 30&ல் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதி களில் ஒருவரான நீதிபதி தர்மவீர் சர்மாவும் கடைப்பிடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது)

‘நுழைவாயிலில் உள்ள பூட்டை அகற்றுவதன் மூலம் வானம் இடிந்து விழாது, — எவ்விதமான சட்டம், ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது’ என்று கே.எம்.பாண்டே தமது தீர்ப்பில் ஆரூடம் கூறி னார். ஆனால், அவர் எழுதிய தீர்ப்பு உலர்வதற்கு முன்பாக, லக்னோ, படாயூன், ஜவ்னபூர், மீரட், வாரணாசி, ஸ்ரீநகர் போன்ற நகரங்களிலும், சிற்றூர்களிலும் கலவரங்கள் நடைபெற்றன. இவை கே.எம்.பாண்டே தீர்ப்பு வழங்கிய ஒரு சில நாட்களுக்குள் நடந்தவையாகும். இதைத் தவிர பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொல்லப்படுவதற்கு இந்த தீர்ப்புதான் காரணமாக இருந்தது.

கே.எம்.பாண்டேயும் அவரது எஜமானர்களான விசுவ ஹிந்து பரிஷத்தும் இந்தத் தீர்ப்பு மூலம் முதலில் நீதிக்கும், பின்னர் முஸ்லிம்களின் உரிமைக்கும், உயிருக்கும் சமாதி கட்டியுள்ளனர். இந்த ஈனச் செயலைப் புரிய அவர்களுக்கு ஆக்கமும், ஊக்க மும் அளித்தது அப்போது ஆட்சியி லிருந்த ராஜீவ் காந்தி அரசுதான் என்பதை சந்தேகமற நிரூபிக்கும் சாட்சியங்கள் உள்ளன. அரசின் ஆசீர்வாதமில்லாமல் இவ்வளவு துணிச்சலாக அநீதமான முறை யில் கே.எம்.பாண்டே தீர்ப்பு வழங்கியிருக்க முடியாது. விசுவ ஹிந்து பரிஷத்தும் இவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்திருக்க முடியாது.

பிப்ரவரி 1ல் பாபரி மஸ்ஜித் பூட்டு உடைக்கப்படுவதற்கு காரணம் ராஜீவ் காந்தி.

1985 ஏப்ரலில் ஷாபானு வழக்கில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பைக் கண்டித்து நாடு முழுவதும் முஸ்லி ம்கள் போராட்டம் நடத்தினர். இத்தீர்ப்பைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரினர். இதன் விளைவாக நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 1986 ஜனவரி முற்பகுதியில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் தை நிறைவேற்றியதன் மூலம் தாம் முஸ்லிம்களுக்குப் பணிந்து விட்டதாக சனாதன பயங்கர வாதிகள் எண்ணக்கூடாது என்பதற்காக ராஜீவ், பாபரி பள்ளிவாசல் விஷயத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தின் உத்தரவு களுக்கு அடிபணிந்தார். மாவட்ட ஆட்சியர் ஐ.கே.பாண்டே, மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே ஆகியோர் ராஜீவின் ஆணையை நிறைவேற்றும் முகமாகத்தான் பிப்ரவரி 1, 1986 அன்று பாபரி மஸ்ஜிதின் பூட்டை உடைத்து அதனை நிரந்தரமாக ராமர் கோயிலாக்கினர்.

ராஜீவின் இவ்விஷமச் செயலை அம்பலப்படுத்தினார் அவரது அமைச்சரவையில் அப்போது உள்துறை இணை அமைச்சராக இருந்த திரு. அருண் நேரு. டெல்லி யிலிருந்து வெளிவரும் ‘அக்பரே நவ்’ எனும் உருது வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘1986ன் ஆரம்பத்தில் முஸ்லிம் களை திருப்திப்படுத்த முஸ்லிம் பெண்கள் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்பின் ஹிந்துக்களை திருப்திப்படுத்த வந்ததே அயோத்தியைப் பற்றிய முடிவு. இந்த முடிவு அபாய கரமானது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் அதற்கு உடன்படவில்லை. தொலைக் காட்சியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்வது ஏன் காட்டப்படுகின்றது என்று பூட்டு உடைக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து திரு. ராஜீவ் காந்தியிடம் கேட்டேன். அவர் பதிலளிக் கவில்லை. வெறுமனே சிரித்து விட்டு, முஸ்லிம் பெண்கள் மசோதா நிறைவேற் றப்பட்டதற்கு பழிக்குப் பழியே (tவீt யீஷீக்ஷீ tணீt) இது என அவர் குறிப்பிட்டார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த வீர் பஹதூர் சிங்கிற்கு கடிதம் மூலம், பூட்டை உடைக்க யார் உத்தரவிட்டது என்று கேட்டேன். இது குறித்து பிரதமரிடம் (ராஜீவிடம்) தான் நான் கேட்க வேண்டுமென அவர் பதிலளித்தார்.’

(உருதுவில் வெளியான இப்பேட்டியின் ஆங்கில மொழிபெயர்ப்பை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளிதழ் 17.-8-.89ல் பிரசுரித்தது).

பாபரி மஸ்ஜித் பூட்டு 36 ஆண்டுகளுக்குப் பிறகு உடைக் கப்பட ராஜீவ் காரணமாக இருந்தார் என்பதற்கு மற்றொரு சான்றை ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் நிருபர் நீரஜா சௌத்திரி 1986லேயே வழங்கினார். பாபரி மஸ்ஜித் பூட்டை மார்ச் 9&க்குள் உடைக்கும்படி விசுவ ஹிந்து பரிஷத், அரசுக்கு கெடு கொடுத்திருந்தது. இந்தக் கெடு விற்கு ராஜீவ் சரணடைந்தார். நீரஜா கூறுகிறார்:

சிவராத்திரிக்கு மார்ச் 8, 1986க்கு முன்பு கட்டடத்தின் கதவுகள் ‘பக்தர்களுக்கு திறக்கப்பட வேண் டும்’ என்பதை ராஜீவ் காந்தி எவ்வித சந்தேகமுமில்லாமல் தன்னிடம் சுட்டிக் காட்டியதாக ஒரு மூத்த விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் கூறியுள்ளார் (ஸ்டேட்ஸ் மென் ஏப்ரல் 20, 1986 இதழில் நீரஜா சௌத்திரி).

ராஜீவ் காந்தி விசுவ ஹிந்து பரிஷத்திற்கு கொடுத்த வாக்குறுதியில் வாய்மையான வராக திகழ்ந்தார். கெடு முடிவதற்கு 36 நாட்களுக்கு முன்னதாகவே பாபரி மஸ்ஜிதை அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

ஆக, பிரதமராக அப்போது இருந்த ராஜீவ் காந்தி, சனாதன பயங்கரவாத இயக்கமான விசுவ ஹிந்து பரிஷத், நீதியியல் துறையின் அவமானச் சின்னமாக விளங்கும் கே.எம்.பாண்டே ஆகியோரின் கூட்டு சதியினால்தான் 36 ஆண்டு காலம் பூட்டப்பட்டிருந்த பாபரி மஸ்ஜித், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல் திறந்து விடப்பட்டது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Check Also

பாபரி மஸ்ஜிதும், நீதிமன்றங்களும்! ஒரு வரலாற்றுப் பார்வை-4

வி.பி. சிங் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பிரிவில் ஜனவரி 8, 1990ல் ஹிந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *