Breaking News

பாபரி பள்ளிவாசலும், நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-குறுந்தொடர் (1)

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பாபரி மஸ்ஜித் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை எப்படித் தொடங்கியது என்பது குறித்தும் இது குறித்து கடந்த காலங்களில் இந்தப் பிரச்னையை நீதிமன்றங்கள் எப்படி அணுகின என்பது குறித்தும் இங்கே காண்போம்.


பாபரி மஸ்ஜித் இடம் ராமர் பிறந்த பூமி என்ற கதையை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர் கள்தான். வெள்ளைக்கார ஆதிக்கத்திற்கு எதிராக மவ்லவி அஹ்மதுல்லாஹ் ஷா தலைமை யில் அயோத்தியில் 1857ல் நடைபெற்ற வீரமிக்க போராட்டத்தில் மண்ணைக் கவ்வும் நிலைக்கு பிரிட்டன் ராணுவம் தள்ளப்பட்டது. அப்போது வெள் ளைக்காரர்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தவர் அயோத்தியில் உள்ள ஹனுமான்கிரி கோவிலின் பூசாரி ரகுபர்தாஸ்.

போர் முடிவடைந்தவுடன் வெள்ளைக்காரர்களின் தூண்டுதலின் காரணமாக பாபரி மஸ்ஜித் வளாகத்தில் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அதனை ராம் சபூட்ரா என்று அழைத்து அதுவே ராமர் பிறந்த இடம் என்று ரகுபர் தாஸ் அறிவித்துக் கொண்டார்.

இதன் பிறகு இந்த திண்ணை மீது கோவில் கட்ட அனுமதிக்குமாறு சப் ஜட்ஜ் பண்டிட் ஹரி கிருஷ்ண சாஸ்திரியின் நீதிமன்றத்தில் உரிமையியல் (சிவில்) வழக்கு தாக்கல் செய்தார் ரகுபர் தாஸ் (வழக்கு எண் 61-280 ஆப் 1885). இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரி கிருஷ்ண சாஸ்திரி,  மனுவை தள்ளுபடி செய்து பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘இந்த காலக்கட்டத்தில் கோவில் கட்ட அனுமதி கொடுப்பது கலவரத்திற்கும் படுகொலைகளுக்கும் வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் பள்ளிவாசலுக்கு வெளியில் அமைந்திருக்கும் திண்ணை ரகுபர் தாசுக்கு சொந்தமானது என்று அவர் தீர்ப்பு வழங்கினார். 1857-போரில் ஆங்கிலெயர்களுக்கு உதவி செய்ததற்கான நன்றிக்கடன் அது.
அடுத்து ரகுபர் தாஸ், பாபர் பள்ளிவாசல் ராமர் கோயிலை இடித்துவிட்டுத் தான் கட்டப்பட்டது என்று கூறி மாவட்ட நீதிபதி கர்னல் சேம்பியர்ஸின் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மார்ச் 26, 1886ல் இம்மனுவை நீதிபதி சேம்பியர்ஸ் தள்ளுபடி செய்தார். இருப்பினும் கோவிலை இடித்து விட்டு பாபர், பள்ளிவாசலை கட்டினார் என்ற ரகுபர் தாசின் கதையை எவ்வித சான்றுகளுமில் லாமல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஏற்ப நீதிபதி சேம்பியர்ஸ் ஏற்றுக் கொண்டார்.

இதே நேரத்தில் பாபரி பள்ளிவாசல் கட்டடத்திற்கு வெளி யில் அமைந்திருந்த ராம் சபூட்ரா (திண்ணை) ரகுபர் தாசுக்கு சொந்தமானது என்று சப் ஜட்ஜ் ஹரி கிருஷ்ண சாஸ்திரியின் தீர்ப்பை நிராகரித்தார்.

மாவட்ட நீதிபதி தனது மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து அவ்த் மாகாண நீதியியல் ஆணையாளர் டபிள்யூ. யங்கிடம் மேல் முறையிடு செய்தார் ரகுபர் தாஸ். பூசாரி சொன்ன கதையை ஏற்றுக் கொண்ட போதினும் ஆணையாளர் யங் முந்தைய நீதிமன்றங்கள் ரகுபர் தாசின் வழக்கை தள்ளுபடி செய்தது சரியானதே என்று மே25, 1885ல் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பிற்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விவகாரம் குறித்து எவ்வித வழக்கும் தொடுக்கப்படவில்லை.

1949 டிசம்பர் 22 இரவு பாபரி பள்ளிவாசலின் நடு கும்பத்தின் கீழ் சிலைகள் கள்ளத்தனமாக வைக்கப்பட்டன. இது குறித்து அயோத்தி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 29, 1949ல் பைஸாபாத்-அயோத்தி நகர கூடுதல் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் (மாஜிஸ்ட்ரேட்) மார்க்கண்டே சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

மாஜிஸ்ட்ரேட் மார்க்கண்டே சிங் இந்திய குற்றவியல் சட்டத்தின் 145ம் பிரிவின் கீழ் பள்ளிவாசலை நீதிமன்ற பாதுகாவலின் கீழ் (அட்டாச்மென்ட்) கொண்டு வர உத்தரவிட்டார். பைசாபாத்-அயோத்தி நகராட்சி தலைவர் சொத்தின் பரமாரிப் பாளராக (ரீசிவர்) நியமிக்கப் பட்டார். மாஜிஸ்ட்ரேட் டின் அனுமதிப் பெற்று பள்ளிவாச லுக்குள் இருக்கும் சிலைக ளுக்கு பூஜை செய்வதற்கு நான்கு பூசாரிகளை மாஜிஸ்ட்ரேட் நியமித்தார். ஹிந்துக்கள் பூஜை நடப்பதை பள்ளி வாசலுக்கு வெளியில் நின்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் அருகில் வருவதற்கு கூட அனுமதி மறுக் கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட்ட தீர்ப்புகளில் இது முதலாவதாகும். ஏனெனில் இந்திய குற்றவியல் சட்டத்தின் 145&வது பிரிவின் நோக்கத்தை புரிந்துக் கொள்ளாமல் அல்லது வேண்டு மென்றே முஸ்லிம்களுக்கு எதிராக மாஜிஸ்ட்ரேட் மார்க் கண்டே சிங்கின் தீர்ப்பு அமைந்தது.

இந்திய குற்றவியல் சட்டத்தின் 145&ம் பிரிவின் கீழ் ஒருவரின் அனுபவத்தில் இருக்கும் சொத்தை இன்னொருவர் ஆக்கிரமித்தால், ஆக்கிரமிப்பாளர் அகற்றப்பட்டு ஏற்கெனவே இருந்தவரிடம் அச்சொத்து ஒப்படைக்கப்பட்டு பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது சிவில் (உரிமையியல்) வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆனால் பாபரி மஸ்ஜித் வழக்கில் இந்த நடைமுறையை மாஜிஸ்ட்ரேட் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார். இந்த தீர்ப்பின் காரணமாக பாபரி பள்ளிவாசலின் கதவுகள் பூட்டியிருக்க, உள்ளே சிலைகள் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஜனவரி 6, 1950&ல் கோபால் சிங் விஸாரத் என்பவர் பைசா பாத் சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். பாபரி பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டு ள்ள சிலைகளை தடையின்றி வணங்க உத்தரவிட வேண்டும் என்பதே அவரது மனு. இதில் ஐந்து முஸ்லிம்கள் உட்பட எட்டு பேர் எதிர்வாதிகளாக குறிப்பிடப் பட்டனர். உத்தரபிரதேச அரசு, பைஸாபாத் துணை ஆணையாளர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அதில் அடங்குவர். சிவில் நீதிபதி என்.என். சத்தா இந்த வழக்கை விசாரித்தார்.

இவ்வழக்கில் உத்தர பிரதேச அரசின் சார்பாக எதிர்வாதியாக ஆஜராகிய பைஸாபாத் துணை ஆணையாளர் ஜே.என். உக்ரா நீதிமன்றத்தில் பின்வரும் அறிக்கைகளை தாக்கல் செய்தார்:

‘வழக்கில் தொடர்புடைய சொத்து பாபரி மஸ்ஜித் என்று அழைக்கப்படுகின்றது. மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலாக அது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அது ஸ்ரீராமரின் கோவிலாக இருந்ததில்லை.(அறிக்கையின் 12வது பத்தி)

‘டிசம்பர் 22 1949 இரவில் ஸ்ரீராமரின் சிலைகள் கள்ளத்தன மாகவும் தவறான முறையிலும் உள்ளே வைக்கப்பட்டன. (அறிக்கையின் 13வது பத்தி)

உ.பி. அரசின் சார்பாக இப்படி யான ஒரு உண்மை நிலை அறிக்கை சமர்பிக்கப்பட்ட போதிலும் அநீ தியின் வடிவமாக அமர்ந்திருந்த நீதிபதி என்.என். சத்தா, கோபால் சிங்கின் கோரிக்கையை ஏற்று சிலைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார்.

பிறகு இந்த இடைக்காலத் தடை உத்தரவு மார்ச் 1951&ல் சிவில் நீதிபதி ஒருவரால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு அவை அனைத்தும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவிற்கு முன்பு 1961ல் கொண்டு வரப்பட்டது.

 

பேரா. அருட்செல்வன்

Check Also

பாபரி பள்ளிவாசல் நீதிமன்றங்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை-3

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ராஜீவ் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி 36 ஆண்டு காலமாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *